டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை எல்லை நாடுகள் வழியாக மீட்க இந்திய அரசு முயற்சி செய்தவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அண்டை நாட்டு எல்லைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையில் இன்று 3வது நாளாக போர் நீடித்து வருகிறது. அந்நாட்டின் தலைநகர் கிவ்-ஐ பிடிக்க ரஷ்ய ராணுவப்படை தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. தொடர் தாக்குதல் காரணமாக, அங்குள்ள இந்தியர்கள், தங்களை மீட்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏராளமானோர் மெட்ரோ சுரங்க பாதையில்தஞ்சமடைந்துள்ளனர்
இந்த நிலையில் அண்டை நாடுகளின் எல்லைகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எல்லைகளை நோக்கி நகர வேண்டாம் என்று உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை வழங்கியுள்ளது.
கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. முன்னறிவிப்பின்றி செல்வோரை எல்லை தாண்ட வைப்பது சிரமமாக உள்ளது. மேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் இருப்பது எல்லையை நோக்கி செல்வதை விட பாதுகாப்பானது.
இந்தியர்களை வெளியேற்ற அண்டை நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. தூதரக அதிகாரிகள், தூதரக அவசர தொலைபேசி எண்களை அவசர உதவிகளுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகள் வழியே மாணவர்கள் இந்தியர்களை மீட்கும் பணி நடைபெறும் நிலையில் இந்திய தூதரகம் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது
முன்னதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோவ் குலேபா இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடத்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட கூட்டம் நடைபெறுகிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.