டில்லி
இந்தியர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் ஓய்வின்றி பணி புரிவதாகச் சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
உலகெங்கும் தொழிலாளர்கள் நல அமைப்புக்கள் பல செயல்பட்டு வருகின்றன. அவை ஒருவர் எத்தனை மணி நேரம் பணி புரிய வேண்டும், இடையில் எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்கலாம் மற்றும் குறைந்த பட்ச ஊதியம் எவ்வளவு என நிர்ணயம் செய்கின்றன. ஆனால் பல நாடுகளில் அது போல் நடக்கவில்லை என சர்வதேச தொழிலாளர் சம்மேளன ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையில் உலக அளவில் அதிக நேரம் பணி புரிவோர் வரிசையில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது. இங்கு வாரத்துக்கு 48 மணி நேரம் வரை பணி புரிகின்றனர். சொல்லப்போனால் ஜாமியா, மங்கோலியா, மாலத்தீவு, கத்தார் ஆகிய நாடுகளுக்குப் பின்னால் உள்ள இந்தியாவில் உலகின் மொத்த தொழிலாளர்களில் 25% உள்ளனர். ஆனால் இவர்களுக்கு வேலை நேரம் அதிகமாக உள்ளது.
அடுத்ததாக ஒரு வாரத்தில் சீனாவில் 46 மணி, அமெரிக்காவில் 37 மணி, பிரிட்டனில் 36 மணி, மற்றும் இஸ்ரேலில் 36 மணி நேரம் பணி புரிகின்றனர்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் ஒரு தொழிலாளிக்கு அளிக்கப்படும் குறைந்த பட்ச ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. அதே வேளையில் ஒரு சில ஆப்ரிக்கா நாடுகளில் இதை விடவும் குறைவாக ஊதியம் வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் அதற்கான நிரூபணங்கள் கிடைக்கவில்லை. குறிப்பாக உடலுழைப்பை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் இந்த குறைந்த ஊதியத்தின் கீழ் வருகின்றனர்.
தினசரி ஊதியம் பெறும் தொழிலாளர்களில் பலர் கால நேரம் இன்றி பணி புரியும் நிலை இந்தியாவில் அதிக அளவில் உள்ளது. இதில் பெண்களை விட ஆண்கள் அதிக நேரம் பணி புரிகின்றனர். இந்நிலை கிராமம் மற்றும் நகரம் ஆகிய இரு இடங்களிலும் உள்ளன.
கிராமப்புறங்களில் சொந்த தொழில் புரிவோர் மிகவும் அதிக அளவில் பணி புரிகின்றனர். அந்த பகுதிகளில் ஊதியம் பெறுவோரும் வாரத்துக்கு 52 மணி நேரத்துக்குக் குறையாமல் பணி புரிகின்றனர். அங்குப் பெண்கள் சுமார் 46 மணி நேரம் பணி புரிகின்றனர். இதைப் போல் ஆண்கள் வாரத்துக்கு 46 மணி நேரம் பணி புரியும் இடங்களில் பெண்கள் 38 மணி நேரம் மட்டுமே பணி புரிகின்றனர்.
மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியத் தொழிலாளர்கள் பலர் ஓய்வின்றி தொடர்ந்து பணீ புரிய வேண்டி உள்ளது. பொதுவாக சிறு இடைவெளி, உணவு இடைவெளி, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பயணம் செய்யும் இடைவெளி ஆகியவை மட்டுமே இந்தியத் தொழிலாளர்களுக்கு ஓய்வு நேரமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக வீட்டுப் பணி செய்வோருக்கு ஓய்வின்றி பணி செய்யும் நிலை அதிகமாக உள்ளது.
சர்வதேச அளவில் மற்ற நாடுகளை விட 10ல் ஒரு பங்கு நேரமே ஓய்வு நேரமாக இந்தியத் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. அதிலும் சுய தொழில் முனைவோர் மட்டுமின்றி ஊதியம் பெறுவோருக்கும் இதே நிலை உள்ளது. குறிப்பாகப் பெண்களில் பலர் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஓய்வு நேரத்திலும் ஓய்வு எடுக்காமல் பணி புரியும் நிலை உள்ளது..