அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இர்விங் நகர ஏரிக்கு குழந்தைகளுடன் பொழுதை கழிக்க சென்ற பெற்றோர், பனிக்கட்டிகளால் மூடியிருந்த ஏரியில் தவறி விழுந்தனர்.
பனிக்கட்டி மூடியிருந்த ஏரிக்கு அருகில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது குழந்தைகளின் தாய் அந்த ஏரியில் வழுக்கி விழுந்து இழுத்து செல்லப்பட்டார்.
மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனும் ஏரியில் சிக்கி கொண்டார், எந்த ஒரு மீட்பு கருவியுமின்றி தகவலறிந்து முதலில் வந்த, ஒரு போலீஸ்காரரும் இதில் சிக்கினார்.
பின்னர் வந்த தீயணைப்பு படையினரின் உதவியுடன் இந்த மூவரும் மீட்கப்பட்டனர், மீட்பு பணியின் போது ஒரு தீயணைப்பு வீரரும் ஐஸ் கட்டிகளாலான ஏரியில் தவறி விழுந்தார்.
காயமடைந்த தீயணைப்பு படைவீரர் உள்ளிட்ட நால்வருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது, இதில், மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் குழந்தைகளின் தந்தை ஆகிய மூவரும் சிகிச்சைக்கு பின் தேறிவரும் நிலையில், குழந்தைகளின் தாய் கவலைக்கிடமாக இருக்கிறார்.
அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் யாரும் இந்த ஏரியில் சிக்கவில்லை, இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று தற்போது தெரிய வந்திருக்கிறது. ஏரியில் இருந்து இவர்களை மீட்கும் காட்சி மனதை உறையவைப்பதாக உள்ளது.