டில்லி
தென் கொரியா, ஈரான், இத்தாலி, ஜப்பான் நாட்டினருக்கு அளிக்கப்பட்ட விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று தென் கொரியா, ஈரான் இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நாட்டினர் இந்தியாவுக்குள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளில் வசிப்போர் இந்தியாவில் பயணம் செய்ய அளிக்கப்பட்டுள்ள விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது இன்று அல்லது அதற்கு முன்பு மேலே குறிப்பிட்ட நாட்டினருக்கு அளிக்கப்பட்ட விசாவைக் கொண்டு யாரும் இனி இந்தியாவுக்கு வர முடியாது.
அத்துடன் ஜப்பான் மற்றும் தென் கொரிய மக்கள் இந்தியா வந்த பிறகு விசாவை பெற்றுக் கொள்ளும் வசதி இருந்தது. அந்த வசதியும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது
இந்தியாவுக்கு மிகவும் அவசர காரணமாக வரும் வெளிநாட்டவர்கள் புதிய விசாவுக்கு அவரவர் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.