வாஷிங்டன்: அமெரிக்காவினுடைய தற்போதைய அரசின் குடியேற்ற கொள்கைகள், அந்நாட்டில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணாக்கர்களுக்கு எதிராக உள்ளதால், அமெரிக்காவில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பாமல், கனடாவுக்கு செல்லும் இந்திய மாணாக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் நிர்வாகம், குடியேற்றத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சர்வதேச மாணாக்கர் கொள்கைகளையும் கடுமையாக்கியுள்ளது. மேலும், அன்னிய பணியாளர்களின் குடியுரிமைக்கான ‘கிரீன் கார்டு’ கிடைப்பதும் கடினமாக உள்ளது.

இக்காரணங்களால், இந்தியா மட்டுமின்றி பிறநாடுகளின் மாணாக்கர்கள் கனடாவில் உயர்கல்வி கற்க செல்வது அதிகரித்துள்ளது. கடந்த 2016-17 மற்றும் 2018-19ம் கல்வி ஆண்டுகளில், கனடாவில் உயர்கல்வி கற்கச் சென்ற இந்திய மாணாக்கர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

கனடா, சர்வதேச மாணாக்கர்களுக்கு ஆதரவான கொள்கைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியா, சீனா, வியட்னாம், பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த மாணாக்கர்கள், ஆங்கில தேர்வில் வெற்றி பெற்றால், நேரடியாக 1,400 கல்வி மையங்களில் சேரும் புதிய திட்டத்தை 2018ம் ஆண்டு கனடா அறிமுகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.