டில்லி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஒளி மின் உபகரணங்களுக்கு இறக்குமதி தீர்வு சலுகை ரத்து செய்யப்பட்டால் கடும் இழப்பு உண்டாக வாய்ப்புள்ளது.

சீனப்படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிர் இழந்ததையொட்டி சீனப் பொருட்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.   அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம் சீனப் பொருட்கள் இறக்குமதி மற்றும் வர்த்தகம் செய்யத் தடை விதிக்குமாறு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.  சீனாவில் இருந்து பல அவசியமான மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

இதில் சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்கள் முக்கியமான ஒன்றாகும்.  தற்போது புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கு இந்திய அரசு முக்கியத்துவமளித்து வருகிறது.  அவ்வகையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்குத் தேவையான பொருட்களுக்கு இறக்குமதி தீர்வு சலுகை அளித்து வருகிறது.   இந்த பொருட்களில் 85 – 90% பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.  இவற்றுக்கு தற்போது இறக்குமதி தீர்வு கிடையாது.

வரும் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு அரசு சூரியஒளி மாட்யூல்களுக்கு 20-25% மற்றும் பேட்டரிகளுக்கு 15% தீர்வு விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.  மேலும் விரைவில் இவை அனைத்துக்கும் 40% ஆக இறக்குமதி தீர்வு உயர்த்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.  தற்போது 25 ஜிகா வாட அளவுக்குச் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க உற்பத்தியாள்ரக்ளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.  இனி ஆகஸ்ட் 1 முதல் அனுமதி அளிக்கப்படும் நிலையங்களுக்கு இந்த தீர்வு அமலுக்கு வர உள்ளன.

இது குறித்து அகில இந்திய சோலார் மின் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஹிதேஷ் ஜொஷி, “இந்திய அரசு அனைத்துப் பொருட்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம்.  ஆனால் தற்போது இந்திய அரசு அறிவித்துள்ள இறக்குமதி தீர்வு எங்களுக்கு மிகவும் செலவை அளிக்கும். இதனால் எங்களுக்கு ரூ.50000 கோடி இழப்பு ஏற்படும்.   இது இந்திய அன்னிய செலாவணியில் உண்டாகும் இழப்பாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.