டில்லி
வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 8738 ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் ரெயில் நிலையத்தில் மேம்பாலத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் 23 பேர் நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தனர். அதை ஒட்டி ரெயில் நிலையங்கள் பலவற்றில் அடிப்படை வசதிகளே மிகவும் குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்தன. இதை சீரமைக்க இந்திய ரெயில்வே ஒரு குழுவை அமைத்தது.
அந்த குழுவின் பரிந்துரைப்படி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 8738 ரெயில் நிலையங்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் ரெயில் பெட்டிகளுக்கான அறிவிப்பு பலகை, நடைமேடையின் மேல்கூறை, அதில் சூரிய ஒளி தகடு பொருத்துதல், குறைந்தது 6 மீட்டர் அகல நடைபாதை கொண்ட மேம்பாலங்கள், சாய்வுப் பாதைகள், கழிப்பறைகள், தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த ரெயில் நிலையங்களில் 507 புற நகர் ரெயில் நிலையங்கள், 2326 அனைத்து ரெயில்களும் நின்று செல்லும் ரெயில் நிலயங்கள் உள்ளன. மீதமுள்ளவை கிராமப்புற ரெயில் நிலையங்கள் ஆகும். இவை அனைத்திலும் பெண்களுக்கு தனி தங்கும் கூடங்கள், கைக்குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் அறை உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்க உள்ளதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது