டில்லி

ந்தியாவில் மேலும் 150 தனியார் ரெயில் சேவைகள் தொடங்க உள்ளதாக ரெயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய ரெயில்வே வாரியம் முதன் முதலாக டில்லி மற்றும் லக்னோ இடையே செல்லும் தேஜாஸ் ரெயிலை தனியார் மயமாக்கியது.    இந்த ரெயிலில் நிர்வாகம், பயணச்சீட்டு விற்பனை ஆகியவை தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.  இதில் பயணம் செய்வோருக்கு ரூ.25 லட்சம் வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.    அத்துடன் ரெயில் தாமதத்துக்கும்  இழப்பீடு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வரும் 2021 ஆம் வருடத்துக்குள் சரக்கு ரெயில் செல்ல தனிப்பாதை அமைக்கப்பட உள்ளது.  தற்போது மணிக்கு 60 கிமீ வரை செல்லும் சரக்கு ரெயில் அதன் பிறகு 100 கிமீ வேகத்தில் செல்லும்.   இந்த புதிய பாதை சரக்கு ரெயிலுக்கு மட்டுமே அமைக்கப்படும்.

அதன் பிறகு பயணிகள் ரெயில் தனிப்பாதையில் இயக்கப்படும்.   இவ்வாறு இயக்கப்படும் போது காத்திருப்போர் பட்டியல் என்பது அடியோடு நீக்கப்படும்.  அதற்கு மேலும் அதிக அளவில் ரெயில்களை இயக்க வேண்டும்.   இதற்கு தனியார் ஒத்துழைப்பை ரெயில்வே கோரி உள்ளது.  விரைவில் 150 தனியார் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.   இந்த ஒப்பந்தப் புள்ளிகளில் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய சொந்த ரெயிலை இறக்குமதி செய்தோ அல்லது எங்களிடம் இருந்து கொள்முதல் செய்தோ பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.    அத்துடன் ரெயில்வே வாரியத்திடம் இருந்து தனியார் ரெயில் பெட்டிகளை வாடகைக்கும் பெற முடியும்.

இதன் மூலம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நிறுத்தப்பட மாட்டாது.   எனவே ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்னும் அச்சம் வேண்டாம்.   மேலும் இது குறித்து ஊழியர் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.  இந்த பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்த பிறகே இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.