டில்லி

ந்திய ரெயில்வே சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகின் மிகப் பெரிய ரெயில்வேக்களில் இந்திய ரெயில்வே ஒன்றாகும். நாடெங்கும் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் இந்திய ரெயில்வே சேவை செய்து வருகிறது. அதே நேரத்தில் சரக்குகளைக் கொண்டு செல்லும் சேவையும் செய்து வருகிறது. இதற்காக தனி ரெயில்கள் இயங்குகின்றன. அத்துடன் பெரும்பாலான ரெயில்களில் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

இந்தியாவில் புகழ்பெற்று  விளங்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் அமேசான் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வோருக்கு இந்தியா முழுவதும் பொருட்களை அனுப்ப வேண்டியுள்ளது. இதனால் இந்த அமேசான் நிறுவனம் இந்திய ரெயில்வே உடன் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தப்படி மும்பை ராஜதானி மற்றும் ஷீல்தா ராஜதானி ஆகிய  இரு ரெயில்களில் அமேசான் நிறுவனத்துக்கு 2.5 டன் எடை எடுத்துச் செல்லக்கூடிய சரக்கு பெட்டிகள் ஒதுக்கப்பட உள்ளன. இதில் அமேசான் நிறுவனப் பொருட்களை மட்டும் அந்த நிறுவனம் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த ஒப்பந்தம் 1 மாதத்துக்குப் போடப்பட்டுள்ளது. இது விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் சரக்குகளை ஏற்றுவது மற்றும் அமேசான் நிறுவனத்தின் பொறுப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயில்வே சுமை ஏற்றுவோர் சங்கம் அதிருப்தி அடைந்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் இப்பிரிவை எதிர்த்து சங்கத்தின்சர்பில் வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.