டில்லி
பயணிகள் ரயிலை இயக்க விரும்பும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து இந்திய ரயில்வே விருப்ப மனுவை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் மக்கள் அதிக அளவில் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இது மக்களுக்கு மிகவும் மலிவான மற்றும் வசதியான போக்குவரத்தாக உள்ளது. இந்தியாவில் கடும் எதிர்ப்புக்கு இடையே ரயில் இயக்கம் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பட்டு நல்ல வளர்ச்சி ஏற்படும் என இந்திய ரயில்வே கூறி வருகிறது.
நேற்று இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 109 வழித்தடங்களில் 151 நவீன ரயில்களுக்கான விருப்ப மனுக்கள் தனியாரிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்மூலம் சுமார் ரூ.30000 கோடி முதலீடு ரயில்வேத் துறைக்குக் கிடைக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 109 தடங்களில் 12 நிலையங்கள் வழியாக 16 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்பட உள்ளது.
ரயில்வே தனியார் மயமாக்குவது குறித்து ரயில்வே அமைச்சகம், “இந்த நடவடிக்கையின் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுப் பராமரிப்பு மற்றும் பயண நேரம் குறைக்கப்படும். அத்துடன் வேலை வாய்ப்பு அதிகரிப்பு, பாதுகாப்பு மேம்பாடு, உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவம் உள்ளிட்டவை பயணிகளுக்குக் கிடைக்கும். தனியார் நிறுவனங்கள் நிதி, கொள்முதல், இயக்கம் மற்றும் பராமரிப்பை ஏற்க உள்ளனர்.
ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். இதனால் பயண நேரம் வெகுவாக குறையும். இது இந்தியாவில் தற்போது இயங்கும் மிக வேகமான ரயிலை விடவே அதிக வேகமாக இருக்கும். இந்த ரயில்களை இயக்க கால கட்டம் 35 வருடங்களாகும். தனியாரிடம் இருந்து இந்திய ரயில்வேக்கு பயன்பாட்டுக் கட்டணம், மின் கட்டணம் மற்றும் வருமானத்தில் பங்கு ஆகியவை கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளது.