புதுடெல்லி: மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பதிவுசெய்யப்பட்ட 39 லட்சம் டிக்கெட்டுகளை ரத்துசெய்ய இந்திய ரயில்வே முடிவுசெய்துள்ளதாக தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஏப்ரல் 14ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், ஆன்லைன் முன்பதிவு மற்றும் நேரடி முன்பதிவுகள் வழக்கம்போல் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், முதற்கட்ட ஊரடங்கு முடிந்த பின்னர் வழக்கம்போல் ரயில்கள் இயங்கும் என்று கருதிய மக்கள் ஏப்ரல் 15ம் தேதியில் இருந்து மே மாதம் 3ம் தேதி வரையில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்தனர்.
மத்திய அரசின் இரண்டாம்கட்ட நடவடிக்கையை அடுத்து இந்திய ரயில்வே ஏப்ரல் 15 முதல் மே 3ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டிருந்த சுமார் 39 லட்சம் டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படும்போது ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திரும்பி அளிக்கப்படும் . கவுண்டர்களில் முன்பதிவு செய்தவர்கள் ஜூலை 31ம் தேதி வரையில் டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.