ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை மொத்தம் எட்டு முறை இரட்டை சதம் அடிக்கப்பட்டிருக்கிறது.

ஆறு வீரர்கள் இந்த சாதனையை செய்திருக்கின்றனர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இரட்டை சதமடித்துள்ளது இந்தியாவின் ரோஹித் சர்மா மட்டுமே இவர் மூன்று முறை இரட்டை சதமடித்துள்ளார். மேலும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இவர் அடித்த 264 ரன்கள் அதிகபட்ச ரன்னாக உள்ளது.

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 2010 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இன்றோடு 12 ஆண்டுகள் ஆகிறது.

தென் ஆப்ரிக்காவுடனான அந்த போட்டி 2010 ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி குவாலியரில் நடைபெற்றது, 147 பந்துகளில் 25 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 200 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த டெண்டுல்கரின் இந்த ஆட்டத்தால் இந்திய அணி அந்தப் போட்டியை 153 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற டெண்டுல்கரின் இந்த சாதனையை 2011 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவின் வீரேந்திர சேவாக் முறியடித்தார்.

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 149 பந்துகளில் 219 ரன்கள் எடுத்து இரட்டை சதமடித்த இரண்டாவது வீரராக பட்டியலில் இடம்பெற்றார் சேவாக்.

இரட்டை சதமடித்த மற்ற வீரர்கள் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல், நியூஸிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் மற்றும் பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான்.