மாண்ட் பிளாங்க்
பிரான்ஸ் நாட்டில் 1966 ஆம் வருடம் நடந்த விமான விபத்தின் போது பனிக்குவியலில் விழுந்த இந்தியச் செய்தித் தாள்கள் தற்போது கிடைத்துள்ளன.
பிரான்ஸ் நாட்டில் உள்ள மிகப் பெரிய மலைத் தொடரான ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள மாண்ட் பிளாங்க் நகரம் ஒரு சுற்றுலாத்தலமாகும். இங்குள்ள சமோனிக்ஸ் ஸ்கி என்னும் உல்லாச விடுதி அருகே திமோதீ மோட்டின் என்பவர் ஒரு உணவு விடுதி நடத்தி வருகிறார். இந்த மலையில் இருந்து பனி உருகி வரும் போது அதில் பல செய்தித் தாள்கள் மிதந்து வருவதைக் கண்டு சேகரித்துள்ளார்.
அந்த செய்தித் தாள்கள் குவியலில் 12க்கும் மேற்பட்ட 1966 ஆம் வருடத்தின் இந்திய செய்தித்தாள்கள் கிடைத்துள்ளன. அவற்றில் தற்போதும் வெளிவரும் நேஷனல் ஹெரால்ட், எகனாமிக் டைம்ஸ் போன்ற செய்தித்தாள்களும் இருந்துள்ளன. ஈரமாக இருந்த அவை தற்போது காய்ந்து வருவதாகவும் ஆனால் அவை படிக்கும் அளவுக்கு நல்ல நிலையில் உள்ளதாகவும் டிமோத்தீ தெரிவித்துள்ளார்.
இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் அந்த செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட செய்தி உள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்திய வரலாற்றில் முதல் பெண் பிரதமராகப் பதவி ஏற்ற இந்திரா காந்தி நேருவுக்கு அடுத்தபடியாக அதிக நாட்கள் பதவி வகித்த பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். .
இந்த மலையில் கடந்த 1966 ஆம் வருடம் ஜனவரி 24 ஆம் தேதி ஒரு ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் டில்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானமாகும். அது டில்லியில் இருந்து பெய்ரூட், அங்கிருந்து ஜெனிவா அதன் பிறகு லண்டன் எனச் செல்வது வழக்கமாகும். ஜெனேவா செல்லும் வழியில் நடந்த இந்த விபத்தில் 106 பயணிகளும் 11 பணியாளர்களும் உயிர் இழந்தனர். அப்போது பனியில் விழுந்த செய்தித் தாள்கள் தற்போது பனி உருகியதால் மிதந்து வந்துள்ளன.