பாரிஸ்

லகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்

தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை 4-ம் நிலை வில்வித்தை போட்டியின் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். எனவே இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியாகி உள்ளன.

இதில் ஆண்கள் அணிகள் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஒஜாஸ் தியோடெல், பிரத மேஷ் ஜவகர், அபிஷேக் வர்மா ஆகியோர் அடங்கிய அணி தென் கொரியாவை எதிர் கொண்டது. போட்டி 235-235 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது. தொடர்ந்து நடைபெற்று டை பிரேக்கில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்திய ஆண்கள் அணி இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சந்திக்கிறது.

இதைப் போல் பெண்கள் அணிகள் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத்கபூர் ஆகியோர் அடங்கிய அணி 234-233 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்திய பெண்கள் அணி இறுதிப் போட்டியில் மெக்சிகோவுடன் மோதுகிறது.