ராய்ப்பூர்: சாலைப் பாதுகாப்புக்கான உலக டி-20 தொடரின் இறுதிப்போட்டியில், இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்திய இந்திய லெஜண்ட்ஸ் அணி, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. இலங்கை அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் சச்சின் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது.

டாஸ் வென்ற இலங்கை லெஜண்ட்ஸ், முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில், யுவ்ராஜ் சிங் 41 பந்துகளில் 60 ரன்களையும், யூசுப் பதான் 36 பந்துகளில் 62 ரன்களையும் அடித்ததால், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 181 ரன்களை சேர்த்தது.

பின்னர், சற்று சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணியில், ஜெயசூர்யா 43 ரன்களையும், ஜெயசிங்கே 40 ரன்களையும், வீரரத்னே 38 ரன்களையும் அடித்தாலும், யாரும் தேவையான அளவில் அதிரடியாக ஆடவில்லை.

இதனால், 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய லெஜண்ட்ஸ் அணியிடம் தோற்றது இலங்கை லெஜண்ட்ஸ்.