டில்லி

ந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும்  ரோஹிங்கியா இஸ்லாமியர்களை திருப்பி அனுப்பும் திட்டம் இல்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது.

மியான்மரில் ராணுவமும், புத்த மத வெறியர்களும் தாக்குதல் நடத்துவதால் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் தங்கள் உயிரை காக்க வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.  இதுவரையில் சுமார் 3 லட்சம் பேர் வங்கதேசத்தில் அகதிகளாக வந்துள்ளனர்.  இந்நிலையில் ஏற்கனவே சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களை திருப்பி அனுப்புவது பற்றி மியான்மர் மற்றும் வங்கதேச அரசுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு உலகெங்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  ஐ நா சபை மனித உரிமைகள் ஆணைய தலைவர் அல் ஹுசைன் இந்த கலவர நேரத்தில் தங்கியுள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப முயலுவது மிகவும் தவறு என கடுமையாக கண்டித்துள்ளார்.  இந்தியா தற்போது இரக்கத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இது குறித்து மத்திய அரசு சார்பில் அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, “இந்தியாவில் தற்போது சுமார் 40000 ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர்.  இவர்களை திருப்பி அனுப்பும் திட்டம் தற்போது இந்திய அரசுக்கு இல்லை.  இது ஒரு தனிப்பட்ட விவகாரம்.  உச்ச நீதி மன்ற உத்தரவின்படி சட்ட விரோதமாக தங்கி உள்ள அனைத்து நாட்டினரைப் பற்றியும் விவரங்கள் சேகரித்து வருகிறோம். அந்த தகவல்களை அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வருகிறோம்.  அதன் ஒரு பகுதி தான் ரோஹிங்கியா இஸ்லாமியர்களைப் பற்றிய கணக்கெடுப்பும் ஆகும்.

மற்றபடி மியான்மர் அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவது பற்றிய தகவல்களை தெரிவிக்க அரசு விரும்பவில்லை.  இந்திய அரசின் இரக்கத்தன்மையை இந்த உலகே அறியும்.  மனித நேயம் கொண்ட இந்த அரசு எப்போதும் யாருக்கும் தீங்கு விளைவிக்காது” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்க அரசு மியான்மர் அரசுக்கு ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளது.  வெள்ளை மாளிகை இது குறித்த அறிக்கையில், “மியான்மரின் இந்த ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.  மியான்மர் அரசு உடனடியாக கலவரத்தை நிறுத்த வேண்டும்.  மியான்மர் அரசு அதிகாரிகள் சட்டத்தை மதிக்க வேண்டும்.  மக்கள் கலவரத்தினால் இடம் பெயர்வதை தடுக்க ஆவன செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளது.