புதுடெல்லி: பிட்காயின் போன்ற தனியார் மெய்நிகர் நாணயங்களைப் போல், இந்திய அரசின் சார்பில் ஒரு மெய்நிகர் நாணயத்தை நடைமுறைக்கு கொண்டுவர வகைசெய்யும் வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைவில் மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனை தான் மெய்நிகர் நாணயங்கள். அவை, கிரிப்டோகரன்சி என்று அழைக்கப்படுகின்றன. அதில் பிரபலமானது பிட்காயின். இவை உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ளது. 2008ம் ஆண்டில் உலக பொருளாதார நெருக்கடியின்போது வங்கி குறுக்கீடு இன்றி நேரடியாக ஒருவரிடமிருந்து ஒருவர் பரிமாறிக்கொள்ளும் முறையாக இது வடிவமைக்கப்பட்டது. இதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்து பரவலாக கவனம் பெற்றுள்ளது.
கூகுள் பே, போன்பே போன்ற செயலிகளை பயன்படுத்தி பணம் அனுப்புவது போன்றதுதான் பிட்காயின். ஆனால் இங்கு வங்கி அமைப்பு இருக்காது. டிஜிட்டலாக மட்டுமே மாற்றிக்கொள்ள கூடிய ஒரு பணம். கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை 2018ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி தடை செய்திருந்தது. உச்சநீதிமன்றம் இந்த தடையை நீக்கியது. இந்நிலையில் தற்போது நடைபெறும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கும் முழுமையான தடைவிதிக்க வகை செய்யும் வரைவு மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளனர்.
மேலும், அந்த மசோதா மூலம் ஒரு அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை உண்டாக்கும் வழிமுறையை ஏற்படுத்த உள்ளனர். அவை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. தனியார் கிரிப்டோகரன்சிகள் ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக விளங்குவதால் அமைச்சரவை குழு இம்முடிவை எடுத்துள்ளது. அரசும், ரிசர்வ் வங்கியும் கிரிப்டோகரன்சிகள் குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இருப்பினும் 70 லட்சம் இந்தியர்கள் 100 கோடி டாலர்கள் மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகளை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.