அபுதாபி:

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் அபுதாபியில் 370 கோடி டாலரை முதலீடு செய்து 3 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த தகவல் சமீபத்தில் இந்தியாவில் நடந்த அபுதாபி வார நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அபுதாபி முதலீட்டு அலுவலகம், மும்பை மற்றும் டில்லியில் உள்ள அபுதாபி பொருளாதார மேம்பாட்டு துறை ஏற்பாடு செய்திருந்தது.

அபுதாபியில் நேரடி அந்நிய முதலீட்டில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. உற்பத்தி, சுற்றுலா, சுகாதாரம், உள்கட்டமைப்பு, தொழிற்சாலை மேம்பாடு ஆகியவற்றில் அதிக முதலீட்டுக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. அபுதாபியை சேர்ந்த 23 வளர்ந்த தொழில் நிறுவன பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டில் அபுதாபியின் உள்நாட்டு உற்பத்தி 3 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதில் இந்தியர்களின் முதலீடு பெரும் பங்கு வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் இருக்கும் நீண்டகால நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை முதலீடுகளை ஈர்க்க ஏதுவான சுற்றுசூழலை ஏற்படுத்தியுள்ளது.