புதுடெல்லி: ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்காக சிரியா சென்று, அங்கே கணவன் கொல்லப்பட்டுவிட, தற்போது மனைவியும் 4 குழந்தைகளும் இந்தியா திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; 34 வயதான அந்த கணவன் ஒரு பொறியாளர். அவரின் மனைவிக்கு 32 வயது மற்றும் அவர்களுக்கு மொத்தம் 4 குழந்தைகள். அவர்கள் கடந்த 2015ம் ஆண்டு சவூதியிலிருந்து சிரியான சென்றனர். அங்கே செல்வதற்கு முன்னர் அவர்களுக்கு 2 குழந்தைகள்தான். சிரியா சென்றபிறகே அவர்களுக்கு மேலும் 2 குழந்தைகள் பிறந்துள்ளன.
சிரியாவிற்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறியே தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார் அந்த மனிதர். அவர்கள் சவூதியிலிருந்து துபாய் வந்து, பின்னர் அங்கிருந்து துருக்கி சென்று, அதன்பிறகே சிரியாவில் இறங்கியுள்ளனர்.
அங்கே சென்ற பிறகுதான், அப்பெண்ணுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைவதற்காகவே தனது கணவன் தன்னை இங்கே அழைத்து வந்தது தெரியவந்தது. கடந்த 2018ம் ஆண்டு அந்த மனிதர் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவுடன் அப்பெண்ணும் குழந்தைகளும் முகாமில் தஞ்சமடைந்தனர்.
அவர்கள் ஐ.நா. மன்றத்தினால் மீட்கப்பட்டு, இந்தியாவிலுள்ள தங்களின் உறவினர்களை தொடர்பு கொண்டுள்ளனர். தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் சிரியாவிலுள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றின் உதவியால் அவர்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.