இந்தியப் பொருளாதாரமானது ‘மந்தநிலை’ என்பதையும் தாண்டி, ‘மனச்சோர்வு’ என்ற ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக பல பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
இத்தகைய ஒரு மோசமான நிலையை, தனது 73 ஆண்டுகால தனி சுதந்திர நாடு வரலாற்றில் இந்தியா கண்டதில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். மனச்சோர்வு என்ற நிலையை நோக்கி இந்தியா மிகவும் சாத்தியமான வகையில் நகர்ந்துகொண்டிருப்பதாக அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆனால், மோடி அரசால் வெளியிடப்படும் ஜிடிபி மட்டும் மாறுபட்ட புள்ளிவிபரங்களைக் காட்டுவதாக அவர்கள் சுட்டுகிறார்கள். இன்றைய தாக்கம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவர்களின் கூற்றாக உள்ளது.
அவர்கள் மேலும் கூறுவதாவது, “பொருளாதார மீட்பு என்பது ஒரே இரவில் நடந்துவிடாது. அடுத்துவரும் காலாண்டுகளில் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள், மீட்பிற்கான கால அவகாசத்தை எடுத்துக்கொள்ளும்.
அத்தியாவசியமற்ற பொருட்களான துணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றின் விற்பனை மே மாதவாக்கில், 80% வீழ்ச்சியடைந்துள்ளது. அதேசமயம், மருந்துகள் மற்றும் மளிகைச் சாமான் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விற்பனையும் 40% வீழ்ச்சியடைந்துள்ளது.
நவீனகால வரலாற்றில், பொருளாதார மனச்சோர்வு நிலையை நோக்கிப் பயணிக்கும் ஒரே நாடாக திகழ்கிறது இந்தியா. இதிலிருந்து வெளிவர, குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு வருடங்கள் வரை ஆகும்.
நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 30% அளவிற்கு குறையும். ரூ.204 லட்சம் கோடிகள் என்ற அளவில் இருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ரூ.130 லட்சம் கோடிகள் என்ற அளவிற்கு கீழிறங்கும். இந்த நிலையில், அரசுகளால், தங்கள் ஊழியர்களுக்கு ஊதியமே கொடுக்க முடியாத நிலை ஏற்படும்” என்கின்றனர் அந்த வல்லுநர்கள்.
நன்றி: நேஷனல் ஹெரால்டு