டெல்லி:

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில், விமான நிலைய பாதுகாப்பைத் தவிர்ப்பதற்காக விமானி போல ஆடை அணிந்து விமானம் ஏற முயன்ற நபர் கைது பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக, விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் லுஃப்தான்சா என்னும் ஜெர்மனியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானி போல உடையணிந்து, போலி ஐடன்டி கார்டு மூலம்  திருட்டுத்தனமாக விமானத்தில் பயணம் செய்ய முயன்ற நபர் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தன்று டெல்லியில் இருந்து  கொல்கத்தாவுக்குப் பறப்பதற்குப் பதிலாக, லுஃப்தான்சா விமானி எனக் அடையாள  காட்டி ஏர்ஆசிய விமானத்தில் அவர் ஏற முயன்றபோது,  அவர்மீது   பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே அவரிடம் சோதனை நடத்தி விசாரணை நடத்தியபோது, அந்த நபர் பெயர் ராஜன் மஹ்புபானி என்பதும், அவர் வைத்திருப்பது போலி அடையாள அட்டை என்பதும் தெரிய வந்தது.

48 வயதான மஹ்புபானி, ஒரு பைலட் போலவே உடையணிந்திருந்ததால், அவர்மீது ஆரம்பத்தில் சந்தேகம் எழவில்லை என்று கூறிய அதிகாரிகள், அவர் குறித்து லுப்தான்சா அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பைலட் இல்லை என்பது தெரிய வந்ததாகவும் கூறியுள்ளனர்.

டெல்லியை பூர்விகமாக கொண்ட மஹ்புபானி, தொழில் அதிபர் என்றும், விமான நிலைய செக்யூரிட்டிகளின் பாதுகாப்பை தவிர்க்கவே இதுபோன்று உடைஅணிந்து செல்ல முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், அவர் இதுபோல பல உடைகளில் காட்சியளித்த புகைப்படங்கள் இருந்ததாகவும், ராணுவ கர்னலாக உடையுடன் உள்ள படங்கள் இருந்தாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விசாரணையில்,  பைலட் போலி அடையாள அட்டையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாங்காக்கிலிருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளதாகவும்,  உடனடியாக அவரை விமான நிலையத்தைவிட்டு வெளியேற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மாறுவேடத்தில் நபர் ஒருவர் விமானத்தில் ஏற முற்பட்ட சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.