மும்பை: நீதிமன்ற தீர்ப்புகளையும், நீதிபதிகளையும் மிரட்டும் வகையில் செயல்படும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனா அமைச்சர்கள், எம்.பி. சஞ்சய்ராவத் உள்பட பலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வழக்கறிஞர்கள் தொடுத்த வழக்கில், ‘எங்களின் உணர்வுகள் துாய்மையாக உள்ளன. அதனால், எங்களை யார் துாற்றினாலும், விமர்சித்தாலும் கவலையில்லை’ என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள அமைச்சர்கள் பலர்மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், பல வழக்குகளின் மாநில அரசு அத்துமீறி செயல்படுவதையும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதனால், நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் உத்தவ்தாக்கரே உள்பட சிவசேனா தலைவர்களைக் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். அதிக பட்சமாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவ் அரசுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் கடுமையாக விமர்சித்து வருகிறார். தொடர்ந்து சிவசேனா தொண்டர்களைக் கொண்டு தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது.
சிவசேனாவின் அத்துமீறும் நடவடிக்கைகள் குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகள் தங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால், நீதிபதிகளை தரக்குறைவாக விமர்சிப்பது, மஹாராஷ்டிரா அரசின் வழக்கமாக உள்ளது. மும்பை உயர் நீதிமன்றத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநில உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் உட்பட பலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். எனவே, உத்தவ் தாக்கரே, திலீப் வல்சே பாட்டீல், சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை மும்பை, தலைமை நீதிபதி தீபாங்கர் தத்தா, நீதிபதி பிஷித் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு மீது உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், எங்கள் மனதில் எந்த பாரபட்சமும் இல்லை. எங்களின் உணர்வுகள் துாய்மையாக, நேர்மையாக உள்ளன. அதனால், யார் துாற்றினாலும், விமர்சித்தாலும், பாராட்டினாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் நேர்மையாக பணியாற்றுகிறோம் என்பது தான் உண்மை என்று கூறிய நீதிபதிகள் இந்த மீதான விசாரணை, கோடை கால விடுமுறைக்கு பின் நடக்கும்’ என உத்தரவிட்டனர்.
மகாராஷ்டிரா மாநில சிவசேனா அரசின் மிரட்டலுக்கு எதிராக இந்திய பார் அசோசியேசன் களத்தில் இறங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.