புதுடெல்லி:
தெற்கு சூடானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுக் குழுவின் தலைவராக லெப்டினென்ட் ஜெனரல் சைலேஷ் தினைகரை, ஐநா சபை பொதுச் செயலர் அன்டோனியே கட்டரஸ் நியமித்துள்ளார்.
ஏற்கெனவே இந்த தலைமை பொறுப்பிலிருந்த லெப்டினென்ட் ஜெனரல் ஃப்ராங்க் கமான்ஜியின் பதவிக் காலம் மே 26-ம் தேதியுடன் முடிகிறது.
இதனையடுத்து, இந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் சைலேஷ் தினைகர் ஐநாவின் தூதுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ராணுவத்தில் 34 ஆண்டுகள் நீண்ட அனுபவம் ராணுவ அதிகாரி சைலேஷ் தினைகருக்கு உள்ளதாக, ஐநா.சபையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
சைலேஷ் தினைகர் 1983-ம் ஆண்டு இந்திய ராணுவ கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜுலை முதல் காலாட்படை பள்ளியில் கமாண்டராக பணியாற்றியுள்ளார்.
இந்திய ராணுவ தலைமையகத்தில் கூடுதல் இயக்குனர் ஜெனரலாக பணியாற்றியிருக்கிறார்.
அவரது சிறப்பான பணிக்கு இந்திய அரசால் சேனா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
1996-1997 ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 3-வது சரிபார்ப்பு தூதுக் குழுவில் பணியாற்றியிருக்கிறார்.
சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு மற்றும் போர் திறன் படிப்பில் எம்.பில் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.