டில்லி
வரலாற்றில் முதல் முறையாகப் பெண் ராணுவ அதிகாரியான தானியா ஷேர்கில் என்பவர் ராணுவ தின அணிவகுப்புக்குத் தலைமை தாங்கி நடத்தி உள்ளார்.
நேற்று இந்திய ராணுவ தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி டில்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்ஹ்டில் நேற்று கொண்டாட்டங்கள் நடந்தன. இதில் ஒரு பகுதியாக ராணுவத்தினரின் கண்கவர் வண்ண அணிவகுப்புக்கள் நடந்தன. இதில் ராணுவப்படையின் 18 பிரிவினர் கலந்துக் கொண்டனர்
இந்த ஆண் வீரர்களின் அணிவகுப்பைப் பெண் அதிகாரியான தானியா ஷேர்கில் தலைமை தாங்கி நடத்தினார். அணிவகுப்பை பாதுகாப்பு தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நாரவானே, விமானப்படை தளபதி பதூரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் பார்வை இட்டனர். தானியா வரும் குடியரசு தின ராணுவ அணிவகுப்பிலும் தலைமை தாங்கி நடத்த உள்ளார்.
தானியா கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சிக்னல் பிரிவில் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் ஆவார். இவருடைய தந்தை ராணுவத்தில் பணி புரிந்து அதன் பிறகு மத்திய பாதுகாப்பு காவல் துறையில் இணைந்து பணியாற்றியவர் ஆவார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தானியா நாக்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் கல்வி கற்று மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றவர் ஆவார்.