டில்லி

சீனா லடாக் பகுதியில் ஊடுருவவில்லை என மோடி குறிப்பிடுகையில் அவரது அமைச்சரவை சகா ஒருவர் இந்தியாதான் அதிக அளவில் ஊடுருவும் பழக்கம் கொண்டது எனக் கூறி மேலும் அதிர வைத்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்சினை பல வருடங்களாக இருந்து வருகிறது.   எல்லைப் பகுதிகளில் சீனா தனது படைகளைக் குவிப்பதும் பதிலுக்கு இந்தியா தனது ராணுவத்தை இறக்குவதும் பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு படைகள் திரும்பப்பெறுவதும் வழக்கமான ஒன்றாகி உள்ளது.  சமீபத்தில் கல்வான் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்கியதையொட்டி சீனாவுடனான வர்த்தக உறவுகளுக்கு இந்தியா கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

செயற்கைக் கோள் வெளியிட்டுள்ள புகைப்படங்களின்படி சீனா அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து ஒரு கிராமத்தையே அமைத்துள்ளது தெரிய வந்துள்ளது.   ஆனால் பிரதமர் மோடி சீனப்படைகள் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வரவில்லை எனக் கூறி வருகிறார்.  மோடியின் அமைச்சரவையில் சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான விகே சிங் ஒரு புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

விகே சிங், இந்தியா பலமுறை அதாவது சீனாவை விட அதிகமுறை எல்லைக் கோட்டை தாண்டி உள்ளதாகவும் இது வழக்கமான நடைமுறை எனவும் தெரிவித்துள்ளார்.  இதுவரை இத்தகைய ஒரு தகவலை அரசு அறிவிக்கவில்லை என்பதால் இந்த தகவல் ராணுவ வீரர்களை மட்டுமின்றி இந்திய மக்களையும் அதிர வைத்துள்ளது.

இதையொட்டி பல ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் விகே சிங் மீது கண்டனம் தெரிவித்துள்ளனர்.   அவர்கள் சீனா ஆக்கிரமித்ததாக இந்தியாவால் குறிப்பிடும்  1000 சதுர கிமீ நிலத்தை அரசாங்கம் சீனாவுக்கு அளிக்க விரும்புகிறாரா என கேள்வி எழுப்பி உள்ளனர்.  மோடி ஏற்கனவே நமது எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை எனவும் நாமும் என்றும் எல்லை மீறியதில்லை எனவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.,

சீன அமைச்சகம் நேற்று சிங் கூறியதை மறுத்துள்ளது.  இது உண்மையாக இருந்தால் இந்தியா தான் எல்லை மீறி சீனாவை ஆக்கிரமிக்க முயல்கிறது என்னும் கருத்தை வி கே சிங் தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்டுள்ளார். எனக் கருத்து தெரிவித்துள்ளது.  மேலும் இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என மோடி குறிப்பிட்டதற்கு மேலும் இது வலு சேர்த்து இந்தியாவின் தவறு உள்ளதற்கான ஒப்புதல் வாக்குமூலம் எனவும் விமர்சனம் செய்துள்ளது.

முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர், விகே சிங் போன்றவர்களின் அபத்தமான அறிக்கைகளால் மோடி கூறுவது போல் சீனா ஊடுருவவில்லை என்பது உண்மையாவதுடன் இந்தியாவின் மீது தவறு உள்ளதாகச் சீனா கூறவும் வாய்ப்பளிக்கிறது.  கடந்த 2020 ஆண்டு இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சீனாவிடம் இருந்து அந்த பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியை இந்தியா கைவிட்டுள்ளது  போல் தோற்றமளிக்கிறது” எனக் கூறி உள்ளார்

மற்றொரு முன்னாள் ராணுவ அதிகாரி பிரவீன் சாவ்னி தனது டிவிட்டரில், “முன்னாள் ராணுவ அதிகாரி விகே சிங் தனது அறிவிப்பின் மூலம் சீனா நமது 1000 சதுர கிமீ நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதை ஏற்றுக் கொள்வது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி உள்ளார்.  இதன் மூலம் ராணுவ நட்வ்டிக்கைகளை அவர் நிறுத்த உள்ளார். அவருக்குப் போர் நடவடிக்கைகள் தெரியவில்லை.  அவரது கருத்து சீனாவின் பக்கத்தைப் பலப்படுத்தும் வகையீல் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.