பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்திருக்க நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு எடுத்த முடிவு, அந்நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அமைப்பின் முடிவுகளை மதித்து பாகிஸ்தான் நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியை தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க, ஜி – 7 அமைப்பை சேர்ந்த நாடுகளால் நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விஷயத்தில் பாகிஸ்தானை அடுத்த ஆண்டு, பிப்ரவரி வரை, கிரேபட்டியலில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கறுப்பு பட்டியலில் சேர்ப்போம் எனவும் அந்நாட்டிற்கு இந்த அமைப்பு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், ”பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு உத்தரவை எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுப்பது என்பது அந்நாட்டின் நடவடிக்கைகளில் தெரியும். நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு உத்தரவுகளை பாகிஸ்தான் பின்பற்ற வேண்டும் எனவும், அமைதியை நிலை நிறுத்த வேண்டும் என்பதும் நமது எண்ணம். தொடர்ந்து, கிரே பட்டியலில் இருப்பது எந்த நாட்டிற்கும் பின்னடைவையே கொடுக்கும்” என்று தெரிவித்தார்.