புதுடெல்லி: கொலம்பியாவில் நடைபெறும் உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள புறப்பட்ட இந்தியாவின் வில்வித்தை வீரர்களின் குழு, பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டதால் பயணத்தை ரத்துசெய்துவிட்டு திரும்ப வேண்டியதாகிவிட்டது.
இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானின் வான்வழிப் பாதை மூடப்பட்டுள்ளது. இதனால், பல விமான நிறுவனங்கள் மற்றும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொலம்பியாவில் நடைபெறும் உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள, இந்தியாவிலிருந்து தீபிகா குமாரி, பொம்பாய்லா தேவி, அதானு தாஸ், தருண்தீப் ராய் மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோர் அடங்கிய குழு புறப்பட்டது.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த பின்னர்தான், அவர்களுக்கு நிலைமை எடுத்துச் சொல்லப்பட்டது. பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டதால், அவர்களால் இணைப்பு விமானத்தை சரியான நேரத்தில் பிடிக்க முடியாது.
டெல்லியிலிருந்து ஹாலந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் சென்று, அங்கிருந்து பொகோடா சென்று, பின்னர் அங்கிருந்து உள்நாட்டு விமானத்தின் மூலம் மெடல்லின் போய்ச்சேர வேண்டும்.
உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியை, ஏப்ரல் 22 முதல் 28ம் தேதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி