சென்னை:
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், சுகாதார ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் விமானப்படையினர் மருத்துவமனைகள்மீது   மலர் தூவி மரியாதை செய்தது.
குமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநில மருத்துவமனைகள்மீதும் மலர்கள் தூவப்பட்டன. சென்னையில்  ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், கீழ்பாக்கம் மருத்துவமனைகள் மீதும்  மலர் தூவப்பட்டது.

கொரோனாவிற்கு எதிராக நாடு முழுக்க டாக்டர்களும், சுகாதார பணியாளர்களும், அரசு ஊழியர்களும் கடுமையாக போராடி வருகிறார்கள். இவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று நாடு முழுக்க விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவின.  அதுபோல ஆர்மி மற்றும் கடற்படையினரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நன்றி அறிவிப்பு பணி  காலை 10 மணி முதல் 11 மணி வரை  நடைபெற்றது. அப்போத விமானப்படை அணிவகுப்பு நடந்தது. ஹெலிகாப்டர்கள் நாடு முழுக்க முக்கிய நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவியது. போர் விமானங்கள் சுகோய் -30 எம்கேஐ, ஜாகுவார் மற்றும் மிக் 29 ஆகிய விமானங்கள் நாடு முழுக்க பறந்தது.
சென்னை
சென்னையில் 4 ஹெலிகாப்டர்கள் மலர் தூவியது. மேலும் விமானப்படை மற்றும் கடலோர காவல் படையைச் சேர்ந்த தலா 2 ஹெலிகாப்டர்கள் இதில் ஈடுபட்டது. காலை 10.30 மணிக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மீதும், 10.35க்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனை மீதும் மலர் தூவப்பட்டது. 11 மணிக்கு கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனை மீது மலர்கள் தூவி டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.

டெல்லி
டெல்லியில் ராஜ வீதியில் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் பறந்து மரியாதை செய்தது. டெல்லியில் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை, தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, லோக்நாயக் மருத்துவமனை, ஆர்எம்எல் மருத்துவமனை, கங்கா ராம் மருத்துவமனை, பாபா சாகேப் அம்பேத்கார் மருத்துவமனை, மேக்சாகேத் மருத்துவமனை, ரோகிணி மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, ராணுவ மருத்துவமனை மீது மலர்கள் தூவப்பட்டது.

ஒரிசா
ஒரிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மலர்கள் தூவப்பட்டது. மேலும் உத்தர பிரதேசத்தில் இருக்கும் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் மலர்கள் தூவப்பட்டது. வாரணாசியில் பிஎச்யு மருத்துவமனையில் மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. ஜெய்ப்பூரில் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது.

காஷ்மீர்
லடாக்கில் உள்ள லே பகுதியில் இருக்கும் மாவட்ட மருத்துவமனையில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. டேராடூனில் எய்ம்ஸ் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, டூன் மருத்துவமனையில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. கோவாவில் பனாஜியில் உள்ள அரசு மருத்துவமனை மீது கப்பற்படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டது.