பாகிஸ்தான் எல்லையில் இருந்த தீவிரவாதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க அனைத்துக்கட்சியினருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இந்திய வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம்சாட்டிய இந்தியா தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த நாட்களாக எல்லையில் அவ்வபோது தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சரியாக 3.30 மணிக்கு 12மிராஜ் 2000 என்ற போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் எல்லையில் இருந்த பயங்கரவாதிகளின் முக்கிய முகாம்கள் மீது சுமார் 1,000 கிலோ வெடிபொருள் அடங்கிய குண்டு வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் இரு நாட்டிற்கு இடையே மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த விமானப்படை தாக்குதல் குறித்து பேசிய இந்திய ராணுவத்துறை அதிகாரி, ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மீண்டும் இந்தியா மீது பலமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. அதனால் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறினார். இதையடுத்து, எல்லையில் தாக்குதல் நடத்தியது குறித்து பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவருக்கு விளக்கம் அளித்தார்.
அதனை தொடர்ந்து தீவிரவாதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க எதிர்கட்சிகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5 மணியளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது.