ஹராரே: இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியிலும், இந்திய அணி ஜிம்பாவே அணியை தோற்கடித்து ஒயிட்வாஷ் செய்தது. கடைசி நேர ஆட்டம் பரபரப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில், ஷுப்மன் கில் டைவ் அடித்து பிடித்த கேட்ச், இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. ஜிம்பாப்வே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது .
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடிய கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக 3வது வெற்றியை பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 3வது ஒரு நாள் ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
முன்னதாக, இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா, 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. தவன் 40 ரன்களிலும், கேப்டன் ராகுல் 30 ரன்களிலும் ஆட்டமிழக்க, சுபமான் கில் அதிரடியாக விளையாடி 130 ரன்கள் எடுத்தார். அதிரடி வீரர் இஷான் கிஷன் அரை சதம் விளாசினார். சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஜிம்பாப்வே சார்பில் பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளை சுருட்டினார்.
இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியின் சிகந்தர் ரசா 95 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 115 ரன்கள் எடுத்து தன் சமீபத்திய 6 ஒருநாள் போட்டிகளில் 3வது சதத்தை எடுத்தார், கடைசியில் 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்தை தூக்கி மிட் ஆனில் அடிக்க அங்கு ஷுப்மன் கில் முன்னால் டைவ் அடித்து அட்டகாசமான கேட்சை எடுத்ததே இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைகிறது, முன்னதாக திணறிக்கொண்டிருந்த இந்திய அணியை தன் 130 ரன்கள் மூலம் வெற்றி ஸ்கோராக மாற்றியதும் ஷுப்மன் கில்தான்.
ஜிம்பாப்வே எவ்வளவோ முயற்சி செய்தும் கடைசி கட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அந்த அணியின் சிகந்தர் ராஸா 115 ரன்கள் எடுத்தார். எனினும், அவரது சதம் வீணானது. இந்திய சார்பில், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அவேஷ் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இவ்வாறாக அந்த அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 276 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆட்டநாயகனாக சுபமான் கில் தேர்வு செய்யப்பட்டார்.