பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா.
ஏற்கனவே முடிவடைந்த 2 போட்டிகளில், இரு அணிகளும் தலா 1 வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் சுவாரஸ்யம் கூடியது.
டாஸ்வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து 286 ரன்களை எடுத்தது. பின்னர், சேஸிங் செய்வதற்கு கடினமான மைதானம் என்று கூறப்படும் சின்னசாமி மைதானத்தில் 287 ரன்களை நோக்கி களமிறங்கியது இந்தியா.
ஆனால், தொடக்கம் முதலே இந்தியாவின் ஆட்டம் நிலையாக இருந்தது. ரோகித் ஷர்மா ஒரு முடிவுடன் இறங்கியதைப் போல ஆடினார். கடந்தமுறை அதிரடி காட்டிய ராகுல் 19 ரன்களில் அவுட்டாக, கேப்டன் களத்தில் இறங்கி, துணைக் கேப்டனுடன் இணைந்தார்.
இருவரும் வெற்றியை நோக்கி அணியை சீராக நகர்த்தினார்கள். 119 ரன்களை அடித்து ரோகித் ஷர்மா அவுட்டாக, கோலியுடன் இணைந்தார் ஷ்ரேயாஸ். அப்போது அணியின் எண்ணிக்கை 206.
இந்திய பேட்டிங் ஆர்டரை அசைத்துப்பார்க்க, மொத்தம் 7 பவுலர்களைப் பயன்படுத்தியது ஆஸ்திரேலியா. ஆனால், வேலைக்காகவில்லை. சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 89 ரன்களுக்கு ஹேசில்வுட் பந்தில் பவுல்டானார்.
ஆனால், அப்போது அணி 274 ரன்களை எட்டியிருந்ததால், வெற்றியில் எந்த சிக்கலும் இருக்கவில்லை. ஷ்ரேயாஸ் 44 ரன்களுடனும், மனிஷ் பாண்டே 8 ரன்களுடனும் இருந்தபோது இந்தியா வெற்றிபெற்றது.
ஹேசில்வுட், ஆகர் மற்றும் ஸம்பா ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம், ஒருநாள் கோப்பையை இந்தியா வென்றுவிட்டது.
முதல் போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்கள் திணறியதைப்போல், இன்று ஆஸ்திரேலியர்கள் திணறிவிட்டார்கள் என்றே கூறலாம்.