டில்லி:
இந்தியா, பாகிஸ்தான் இடையில் ஓடும் இந்துஸ் நதி பங்கீடு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்தியாவில் உற்பத்தியாகி, பாகிஸ்தான் வழியாகச் சென்று அரபிக் கடலில் கலக்கிறது இந்துஸ் நதி. இந்த நதியின் நீரில் 80 சதவீதத்தை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. இதுதொடர்பாக, இந்தியா, பாகிஸ்தான் இடையே இந்துஸ் நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமீபகாலமாக, பாகிஸ்தான் அரசு, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி பகுதியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பாகிஸ்தானே காரணம் என்று இந்திய அரசு குற்றம்சாட்டியது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், “காஷ்மீரில் இந்திய அரசு நடந்துகொள்ளும் விதத்தினால் எழுந்த எதிர்விளைவே உரி தாக்குதல்” என்று எகத்தாளமாக கூறினார். மேலும், காஷ்மீர் பிரச்சினை குறித்து ஐ.நா. சபையில் பேசியபோதும் இந்தியாவை குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, பாகிஸ்தான் நாட்டின் மீது கடும் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் முயற்சியாக, தற்போது இந்துஸ் நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டத்தை பிரதமர் மோடி நாளை கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
இதன்படி, செனப் நதியின் குறுக்கே Pakul Dul Dam, Sawalkot Dam மற்றும் Bursar Dam என 3 தடுப்பணைகளை கட்டுவது என்றும் அதற்கான பணியை தீவிரப்படுத்தவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
செனாப் ஆறு இமாலச்சல பிரதேசத்தின் தன்டி என்ற இடத்தில் சந்திரா, பாகா ஆகிய இரண்டு ஆறுகள் இணைவதால் உருவாகிறது.
இது தொடங்கும் இடத்தில் இதை சந்திரபாகா என்று அழைக்கிறார்கள். செனாப் காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதி வழியாக பாய்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சமவெளிக்குள் நுழைகிறது. டிரிமு என்ற இடத்தில் செனாப்புடன் ஜீலம் ஆற்றுடன் இணைகிறது.
அகமதுபூர் சையல் என்னுமிடத்தில் ராவி ஆறு இணைகிறது. பின் செனாப், உச் செரிப் என்னுமிடத்தில் சத்லஜ் ஆற்றுடன் இணைந்து பஞ்சநாடு (ஐந்து ஆறுகள்) ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் இணைகிறது. பியாஸ் ஆறானது சத்லஜ் ஆற்றுடன் இந்திய பஞ்சாபில் இணைகிறது. இதன் நீளம் 960 கிமீ. செனாப் ஆற்றின் நீரானது சிந்து நீர் ஒப்பந்தப்படி பாகிஸ்தான் நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய பகுதியில் தடுப்பணைகள் கட்டினால், பாகிஸ்தானுக்கு செல்லும் நீர் தடைபடும். அந்நாட்டில் விவசாயம் கணிசமாக பாதிக்கப்படும். அதனால் பொருளாதார ரீதியாக அந்நாட்டுக்கு பின்னடையவு ஏற்படும். ஆகவே இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டிவிடுவதை பாகிஸ்தான் நிறுத்தும் என்று இந்திய தரப்பு கருதுகிறது.
அதே நேரம், “இந்துஸ் நதி, இந்தியாவில் உற்பத்தியானாலும், பாகிஸ்தானில்தான் நீண்ட தூரம் பாய்கிறது. உலக நாடுகள் கடைபிடிக்கும் நியதிப்படி, கீழ்ப்பாசன பகுதிக்குத்தான் முதல் உரிமை அளிக்க வேண்டும். ஆகவே பாகிஸ்தானுக்கு நீர் செல்வதை இந்தியா தடுக்க முடியாது” என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நீராயுதம், பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.