டில்லி

நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றும் போது ராகுல் காந்தியின் ஆலோசனைப்படி காங்கிரஸார் கோஷமிட்டனர் என ஆங்கில ஏடு குற்றம் சாட்டி உள்ளது.

நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  அந்த உரைக்கு இடையூறு செய்யும் வகையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையில் கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.   மோடி இதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களை தனது உரையில் கடுமையாக சாடி இருந்தார்.    இது குறித்து ஆங்கில ஏடான இந்தியா டுடே ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.   அந்த செய்தியின் விவரம் வருமாறு :

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை மதியம் 12 மணிக்கு வரச் சொல்லி ஆலோசனை நடைபெற்றது.   அப்போது ராகுல் காந்தி உறுப்பினர்களை பல விவகாரங்கள் குறித்தும் கோஷம் எழுப்புமாறு கூறி உள்ளார்.   இதற்கு சோனியா காந்தி சிறிது தயங்கிய போதிலும் ராகுல் அதை வலியுறுத்தியுள்ளார்.    அதை ஒட்டி பாராளுமன்றத்தில் மோடி பேச ஆரம்பித்ததும்  காங்கிரஸார் கோஷம் எழுப்பத் தொடங்கினர்.   மற்ற எதிர்க்கட்சியினரும் அவர்களுடன் அதில் இணைந்தனர்.

முதலில் தயங்கிய சோனியா காந்தி பிறகு உறுப்பினர்கள் கோஷம் எழுப்புவதை ஊக்குவித்துள்ளார்.   ஒரு காங்கிரஸ் உறுப்பினர் தங்களுக்கு தொண்டை கட்டிக் கொள்ளாமல் இருக்க சாக்லேட்டுகளை சோனியாஜி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

”ராகுல் காந்தி எழுப்பப்பட வேண்டிய கோஷங்கள் குறித்து ஏற்கனவே தெளிவாக கூறி இருந்தார்.   அந்த கோஷங்களில் எந்த ஒரு தனி மனிதத் தாக்குதலும் இருக்கக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.   இவை அனைத்தும் கட்சியின் பாராளுமன்ற கொரடா சிந்தியாவால் நடத்தப்பட்டது” என காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவர் கூறி உள்ளார்.

இவ்வாறு அந்த ஏடு தெரிவித்துள்ளது.