டில்லி:
5ஜி தொழில்நுட்பத்துக்கு இந்தியா வரும் ஜூன் மாதத்தில் முழுமையாக தயாராகிவிடும் என்று தொலைதொடர்பு துறை செயலாளர் அருணா சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,‘‘5ஜி திட்டத்துக்கு ஏற்கனவே உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டது. இந்த குழுவில் சர்வதேச வல்லுனர்கள், தொழிற்சாலை வல்லுனர்கள், ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவையான அனைத்து திட்டங்களும் ஜூன் மாதத்தில் தயாராகிவிடும்’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்த குழு நோக்கம், இலக்கு, 5ஜி வழித்தட வரைபடம், ஸ்பெக்டரம் கொள்கை, ஒழுங்குமுறை அமைப்பு, ஆரம்ப கட்ட திட்டங்கள், பரிசோதனை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. கம்பியில்லா அதிவேக 5ஜி சேவையை சந்தைக்கு கொண்டு வர கடும் போட்டி நிலவுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் இந்த ஆண்டு இறுதியில் முதல் வர்த்தக ரீதியிலான பயன்களை அடையும்’’என்றார்.
டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள், அதிகவேக வீடியோ பதிவிறக்கம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுக்கு 5ஜி தொழில்நுட்ப வளத்தில் வழிவகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதைதொடர்ந்து அமெரிக்கா, கொரியா, ஜப்பானில் தொடங்கப்படவுள்ளது. கம்பியில்லா தொழில்நுட்ப தொழிற்சாலைகளில் அதன் சாதனங்கள், செல்போன்களை விற்பனை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.