டெல்லி: இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் விரைவில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, ஐரோப்பா உள்பட பல நாடுகள், குழந்தைகள் சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து தீவிரமாக யோசித்து வரும் நிலையில், ‘இந்தியாவும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த விரைவில் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பமும் உலகம் முழுவதும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் நன்மை பயக்கும் வகையில் பயன்பட்டு வந்தாலும், அதனுடன் தொடர்புடைய சில ஆபத்தான அம்சங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்த சூழலில், உலகின் பல நாடுகளில் சிறார்கள் சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்படுவது குறித்து கவலை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில், ஆஸ்திரேலியா முக்கியமான நடவடிக்கையை எடுத்தது. அந்நாட்டில், 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களை நேரடியாக அணுக முடியாதபடி தடை விதிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டுமெனில், பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் சம்மதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆன்லைன் பதிவு, வயது உறுதி உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால், சமூக வலைத்தள பயன்பாடு அங்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் இந்த அதிரடிநடவடிக்கை உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தங்களது நாடுகளிலும் இதுபோன்ற வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகளை கொண்டு வரலாமா? என பல்வேறு நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. குறிப்பாக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை பின்பற்றி சமூக வலைத்தள பயன்பாட்டில் சிறார்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து பொதுமக்களிடமும், நிபுணர்களிடமும் கருத்துக்களை கேட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை கொண்டு வரலாமா? என்ற கேள்வி தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறும்போது, “வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் பல நாடுகளால் ஏற்கப்பட்டுள்ளன. இது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். தற்போது, பல்வேறு சமூக வலைத்தள நிறுவனங்களுடன் ‘டீப் பேக்’ தொழில்நுட்பம் மற்றும் வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஒரு பெரிய பிரச்சனை. இந்த பாதிப்புகளில் இருந்து நமது குழந்தைகளையும், சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் நிச்சயமாக உள்ளது,” என அவர் தெரிவித்தார்.
தற்போது, குழந்தைகள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தடைசெய்யும் சட்டம் இந்தியாவில் இல்லை. இருப்பினும், 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிறார்கள் பாதுகாப்பு குறித்த இந்த விவாதம் எதிர்காலத்தில் மேலும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]