நியூயார்க்: 2005 முதல், 2016 வரையிலான, 10 ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவில், 27.30 கோடி பேர், வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக, ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
ஐநா வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வளர்ச்சி திட்டம் ஆகியவை இணைந்து ஓர் ஆய்வை நடத்தி சில புள்ளி விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. அந்த புள்ளி விபரத்தில் பல முக்கிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.
உலகம் முழுதும், வறுமையில் தவித்த, 75 நாடுகளில், 65 நாடுகள் படிப்படியாக மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏழை மக்களின் வாழ்க்கையின் சிக்கல்களை தனித்தனியாகவும், கூட்டாகவும் அளவிடும் உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீட்டை அடிப்படையாக கொண்டது இந்த ஆய்வு. கிழக்கு, மத்திய மற்றும் தெற்காசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆப்ரிக்கா மற்றும் பசிபிக் ஆகிய நாடுகளில் பல பரிமாண வறுமைக் குறியீடு காணப்பட்டது.
இந்தியா, ஆர்மீனியா, நிகரகுவா மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நான்கு நாடுகள் 5.5 முதல் 10.5 ஆண்டுகளில் தங்கள் பல பரிமாண வறுமை குறியீட்டை பாதி அல்லது அதற்கு மேற்பட்டதாகக் குறைத்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வின்படி, 75 நாடுகளில் 65 நாடுகள் தங்கள் பல பரிமாண வறுமை குறியீட்டை குறைத்துள்ளன. 50 நாடுகள் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையைக் கூட குறைத்துள்ளன. 10 ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவில், 27.30 கோடி பேர், வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
மூன்று தெற்காசிய நாடுகளான இந்தியா, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகியவை தங்களது பல பரிமாண வறுமையின் மதிப்பைக் குறைக்கும் 16 நாடுகளில் ஒன்றாக இருந்தன. இதுகு குறித்து 2010ம் ஆண்டில் பல பரிமாண வறுமைக் குறியீட்டின் வளர்ச்சிக்கு தலைமை தாங்கிய இயக்குனர் சபீனா அல்கைர் கூறியதாவது:
ஏழைகளின் எண்ணிக்கையை மிகக் குறைக்கும் நாடாக இந்தியா உள்ளது, 27 கோடிக்கும் அதிகமான மக்கள் 2005ம் ஆண்டு முதல் 2016 வரை வறுமையில் இருந்து வெளியேறி உள்ளனர். ஊட்டச்சத்து இழப்பு, பள்ளிப்படிப்பு, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், வீட்டுவசதி மற்றும் சொத்துக்கள் ஆகிய இந்த ஆய்வின் குறியீடுகளாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்றார்.
ஆய்வின் படி, இந்தியாவில் 55.1 சதவீத மக்கள் 2005-06 ஆம் ஆண்டில் பல வறுமையில் வாழ்ந்தனர். ஆனால் 2015-16ல் இது 27.9 சதவீதமாக குறைந்தது. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் ஊட்டச்சத்து இல்லாத மக்களின் சதவீதம் 21.2 சதவீதமாக இருந்தது. சமையல் எரிபொருளை இழந்த மக்கள் 26.2 சதவீதமாக இருந்தனர்.
சுகாதாரம் மற்றும் குடிநீர் இல்லாதவர்கள் முறையே 24.6 சதவீதம் மற்றும் 6.2 சதவீதம். மின்சாரம் மற்றும் வீட்டுவசதி புள்ளிவிவரங்கள் ஆண்டுக்கு 8.6 சதவீதமாகவும் 23.6 சதவீதமாகவும் இருந்தன.