சென்னை: இந்திய – ரஷ்ய நாடுகளின் கடற்படைகள், வங்கக் கடலில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்திய கடற்படையும், ரஷ்ய கடற்படையும் இணைந்து ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குமுன் கடைசியாக, 2018ம் ஆண்டு விசாகப்பட்டினம் கடல் பகுதியில் இருநாடுகளும் கூட்டுப்பயிற்சி நடத்தின. இந்நிலையில், இந்திய-ரஷ்ய கடற்படைகளின் 11வது கூட்டுப்பயிற்சி வங்காள விரிகுடா கடல் பகுதியில் நேற்று தொடங்கியது.
ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்ஜி சோய்கு அழைப்பின் பேரில் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றுள்ள நிலையில், இந்தப் பயிற்சி தொடங்கியது. கூட்டுப்பயிற்சி தொடங்கிய தகவலை இந்திய கடற்படையின் மக்கள் தொடர்பு அதிகாரி கமாண்டர் விவேக் மத்வால் தெரிவித்தார்.
‘இந்திரா நேவி-2020’ என்ற பெயரில் நடைபெறும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஏவுகணை அழிப்பு கப்பல் ரன்விஜய், சக்தி உள்ளிட்ட போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் கலந்துகொள்கின்றன. ரஷ்ய தரப்பில் அட்மிரல் வினோக்ராதோவ், அட்மிரல் டிரிபட்ஸ், போரிஸ் புடோமா ஆகிய போர்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளன.