மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை தொடர்பான வங்கதேச அதிகாரிகளின் அறிக்கைகளை இந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) நிராகரித்தது.

பொதுக் கருத்தை வெளியிடுவதற்கு முன்பு, பங்களாதேஷ் தனது சொந்த சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது வன்முறை ஏற்பட்டது.

இந்த வன்முறையின் பின்னணியில் பங்களாதேஷைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக தகவல் வெளியானதுடன் பங்களாதேஷ் கலவரத்தின் போது அந்நாட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்தது போல் சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டது.

அதேவேளையில், வங்காளதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் செய்தித் தொடர்பாளர் ஷஃபிகுல் ஆலம், வங்காளத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, சிறுபான்மையினரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

“முஸ்லிம் சிறுபான்மையினரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தையும் மேற்கு வங்காள அரசாங்கத்தையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், “மேற்கு வங்காளத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து வங்கதேசம் வெளியிட்ட அறிக்கைகளை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்த நிலையில், நமது நாட்டின் மீது இதே போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி கவனத்தை திசை திருப்ப முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஜெய்ஸ்வால் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

வங்கதேசத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். “தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதற்குப் பதிலாக, பங்களாதேஷ் தனது சொந்த சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது நல்லது” என்று அவர் கூறினார்.