பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அட்டாவுல்லா தரார், “பஹல்காம் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் செவ்வாயன்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோருடன் தனித்தனியாகப் பேசினார்.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பஹல்காம் சம்பவம் குறித்து நடுநிலை விசாரணை நடத்த வேண்டும் என்று அன்டோனியோ குட்டெரெஸுடன் பேசியதாகவும்,
“இன்று மாலை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உடன் தொலைபேசியில் உரையாடினேன். பாகிஸ்தானின் அனைத்து வகையான பயங்கரவாதக் கண்டனத்தையும் நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன், இந்திய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்தேன், மேலும் பஹல்காம் சம்பவம் குறித்து வெளிப்படையான மற்றும் நடுநிலை விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன்.
UNSC தீர்மானங்களின்படி ஜம்மு & காஷ்மீர் சர்ச்சையைத் தீர்ப்பதில் ஐ.நா. தனது பங்கை வகிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். பாகிஸ்தான் அமைதிக்கு உறுதிபூண்டுள்ளது, ஆனால் சவால் செய்யப்பட்டால் அதன் இறையாண்மையை முழு பலத்துடன் பாதுகாக்கும்,” என்று ஷெரீப் எழுதினார்.
அதேவேளையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், “அன்டோனியோ குட்டெரெஸிடம் இருந்து அழைப்பு வந்தது. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு அவர் அளித்த தெளிவான கண்டனத்தைப் பாராட்டுகிறேன். பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டேன். இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள், திட்டமிடுபவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது,” என்று ஜெய்சங்கர் X இல் பதிவிட்டுள்ளார்.