டில்லி:
ஸ்வீடனை போல் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் டீசல் பயன்பாட்டில் இருந்து மெத்தனால் எரிசக்திக்கு நாம் மாற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி கூறுகையில், ‘‘கடல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் கப்பல்களில் உயிர் (பயோ) எரிசக்தியில் இயங்கும் என்ஜின்களை தயாரிக்க வேண்டும் என என்ஜின் தயாரிப்பு நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
வான் போக்குவரத்து கட்டுப்பாடு வழித்தடத்தில் ஆற்று போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு லிட்டர் ரூ.22க்கு கிடைக்கும் மெத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த வேண்டும். ஸ்வீடன் தற்போது டீசல் எரிபொருளில் இருந்து மெத்தனால் எரிபொருளுக்கு மாறியுள்ளது’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘ நிலம் மற்றும் கடல் மாசுபடுவது கவலை அளிக்கிறது. புதிதாக ஒரு சாலை வழித்தடம் அமைக்க ரூ. 80 ஆயிரம் கோடி செலவாகிறது. வாகன எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக இது மேலும் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
சாலை போக்குவரத்தை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு பொது போக்குவரத்து மற்றும் நீர் போக்குவரத்தை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுளளது. கங்கா, பிரம்மபுத்திரா மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா நதிகளில் இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3 மீட்டர் ஆழம் கொண்ட 40 ஆறு துறைமுகங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து வழித்தடத்தில் ஆறு போக்குவரத்தை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் இணைப்புக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 50 முதல் 60 பில்லியன் டாலர் மதிப்பில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 110 பில்லியன் தொழில் முதலீடு அதிகரித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் என கணக்கிடப்பட்டுள்ளது’’ என்றார்.