டெல்லி: பிரதமர் மோடியின் மலேசிய பயணத்தின்போது, பிரதமர் மோடி – மலேசியா பிரதமர் இப்ராஹிம்  முன்னிலையில், இந்தியா – மலேசியா இடையே 11 புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது.

பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக மலேசியாவுக்கு சென்றிருந்தார், அங்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு இரு நாடுகளின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இசை–நடனத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர். நடப்பாண்டில் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேசியாவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.

இந்த நிலையில் று புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ராவில் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பிரதமர் மோடியை மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம், அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை பிரதமர் மோடி பகிர்ந்து, நம்பிக்கை, நட்பு மற்றும் உறவை, இந்தியாவும் மலேசியாவும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு உயர்நிலை பேச்சுவார்த்தையை நடத்தினார். அப்போது இருநாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பின், முக்கிய ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி மற்றும் மலேசிய பிரதமர் முன்னிலையில் கையெழுத்தானது.

இருநாட்டு தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:–

பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது; இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை, சமரசத்திற்கும் இடமில்லை. இந்தியாவும், மலேசியாவும் ஒரு சிறந்த உறவை கொண்டுள்ளன.

இன்று இந்திய வம்சாவளி மக்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடு மலேசியா ஆகும். ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) உடன் இணைந்து, இந்தோ–பசிபிக் பிராந்தியம் முழுவதும் வளர்ச்சி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. வர்த்தகம், முதலீடு, இணைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியாவும், மலேசியாவும் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன என்றார்.

மலேசியா பிரதமர் இப்ராஹிம் கூறியதாவது:–

பிரதமர் மோடியுடனான சந்திப்பு இருநாட்டு உறவுக்கு மிகவும் முக்கியமானது. 1957ம் ஆண்டு முதல் இந்தியா–மலேசியா இடையே இன்று 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் அனைத்து அமைதி முயற்சிகளுக்கும் உறுதியான ஆதரவளிப்பதில் பிரதமர் மோடி கொண்டுள்ள அர்ப்பணிப்புக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது நல்லுறவுகளின் அடையாளமாக, சபா என்ற மாகாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகத்தைத் திறக்கும் இந்திய அரசின் முடிவுக்கு நான் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளேன். சுற்றுலா துறைக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டில் இந்த அற்புதமான வளர்ச்சியை நாம் கண்டிருக்கிறோம். மேலும் விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு, விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாலும் ஏராளமானோர் பயன் அடைவார்கள்.

நான் பலமுறை இந்தியாவிற்கு சென்று நூற்றுக்கணக்கான இடங்களை பார்த்திருக்கிறேன். ஆனாலும் நான் இன்னும் முழு இந்தியாவையும் சுற்றிப் பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன். அது மிகவும் பெரிய நாடு. வரலாறு, கலாச்சாரம், கலைகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு அற்புதமான நாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், தனக்கு அளிக்கப்பட்ட மதிய விருந்து குறித்த காணொளியைப் பகிர்ந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் நம்மில் பலரைப் போலவே, தனது மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்று கூறினார்.

இன்று காலை பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் சிறந்த சந்திப்பு நடைபெற்றது. இந்தியாவும் மலேசியாவும் கடல்வழி அண்டை நாடுகள், இரு நாடுகளும் எப்போதும் நெருங்கிய நட்புறவைப் போற்றி வருகின்றன. வர்த்தகம், உள்கட்டமைப்பு, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் உள்ள வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை நாங்கள் ஆய்வு செய்தோம். பாதுகாப்பு, தற்காப்பு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் செமிகண்டக்டர் ஆகிய துறைகளிலும் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]