டில்லி

பிரிட்டன் எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜிக்கு இந்தியா விதித்த வரியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இந்திய அரசு தோல்வியைச் சந்தித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் தன்னுடைய பங்குகளைக் கடந்த 2006-07 ஆம் ஆண்டு கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியது.  இவ்வாறு பங்குகளை மாற்றியதால் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துக்கு லாபம் கிடைத்துள்ளதாகக் கூறிய இந்திய வருமான வரித்துறை ரூ.10,247 கோடி வரியை விதித்தது.

இந்த வரியைச் செலுத்த மறுத்த கெய்ர்ன் நிறுவனம் வரி விதிப்பை எதிர்த்து வருமானவரி மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது.  அங்குத் தோல்வி அடைந்ததால் கெய்ர்ன் நிறுவனம் டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  அங்கும் நிறுவனம் தோல்வி அடைந்தது.

இதையொட்டி தனது பெரும்பான்மையான பங்குகளை வேதாந்தா நிறுவனத்துக்கு  கெய்ர்ன் நிறுவனம் விற்பனை செய்தது.   ஆனால் கெய்ன் நிறுவனத்தின் 10% பங்குகளை விற்பனை செய்ய அனுமதிக்காத வருமான வரித்துறையினர் நிறுவனப் பங்குகளையும் டிவிடெண்ட் தொகையையும் முடக்கி வைத்தனர்.

இதனால் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.  இந்த வழக்கு சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தது.  தற்போது அளிக்கப்பட்ட தீர்ப்பில், “கெய்ர்ன் நிறுவனத்தின் விவகாரம் வரி சம்பந்தமான பிரச்சினை இல்லை.  இது முதலீடு சம்பந்தமான விவகாரம் ஆகும்.  முன்பு நடந்த பரிவர்த்தனைகளுக்கும் சேர்த்து இந்திய அரசு ரூ.10,274 கோடி வரி விதிப்பது நியாயமானது அல்ல.

எனவே கெய்ர்ன் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்காக $1.2 பில்லியன் அதாவது ரூ.8000 கோடியை இந்திய அரசு வழங்க வேண்டும்.   அத்துடன் வட்டி, மற்றும் ஏற்கனவே இந்நிறுவனம் செலுத்தி உள்ள வரி உள்ளிட்டவற்றைத்  திரும்ப அளிக்க வேண்டும்.  அது மட்டுமின்றி வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ள பங்குகளையும் டிவிடெண்ட் தொகையையும் விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 3 மாதங்களில் இந்தியா சந்தித்துள்ள இரண்டாம் தோல்வி ஆகும். சர்வதேச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் வோடஃபோன் நிறுவனம் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பை ரத்து செய்ய இந்திய அரசுக்கு விற்பனை செய்துள்ளது.ன்    தற்போது அவ்வரிசையில் கெய்ர்ன் நிறுவனம் சர்வதேச அளவில் இந்திய அரசை வழக்கில் வென்றுள்ளது.