பீஜிங்:
சீனா கொண்டு வந்துள்ள மசோதாவிற்கு எதிராக ஹாங்காங் ஆர்ப்பாட்டக்கார்கள் சர்வதேச விமான நிலையத்தினை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து கிளம்பும் இந்திய விமான பயணிகள், விமானம் புறப்படுவது குறித்து அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, தன்னாட்சி பிரதேசம் ஹாங்காங். இங்கு, கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரை, சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை நடத்தும் வகையிலான மசோதா, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங் மக்கள் தொடர் முழக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஏராளமானோர் ஹாங்காங். சர்வதேச விமான நிலையத்தினை முற்றுகை யிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதையடுத்து விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஹாங்கா விமானத்துறை அறிவித்தது. மேலும், விமானப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் யாரும் விமான நிலையம் வர வேண்டாம். இவ்வாறு விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹாக்காம் செல்லும் இந்தியர்களுக்கு இந்தியா அரசு சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், “ஆகஸ்ட் 13 ம் தேதி விமான நிலையத்தின் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ள நிலையில், “விமான நிலைய நடவடிக்கைகளில் இயல்புநிலை மீட்கப்படும் வரை, சிரமத்தை தவிர்க்க மாற்று பயண வழிகளைக் கண்டறிய இந்திய பயணிகள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஹாங்காங்கில் இருந்து புறப்படக் காத்திருக்கும் அனைத்து இந்திய பயணிகளுக்கும் “தங்கள் விமானங்கள் எப்போது கிளம்பும் என்பது குறித்த தகவல்களுக்கு அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்” என்று அமைச்சகம் மேலும் அறிவுறுத்தியது.
மேலும் தேவைப்படுவோர் இந்திய தூதரகத்தை +852 90771083 என்ற எண்ணில்தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.