டில்லி
இந்தியாவில் இயங்கும் சீன நிறுவனங்கள் அந்நாட்டு ராணுவத்துடன் தொடர்பில் உள்ளதா என அரசு கண்காணித்து வருகிறது
இந்திய லடாக் எல்லையில் சீனப்படைகள் குவிக்கப்பட்டதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தியாவும் தனது படைகளை எல்லையில் குவித்தது. பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சீனா தனது படைகளைத் திரும்பப்பெற ஒப்புக் கொண்டது. ஆனால் பின்வாங்குவதாகச் சொன்ன சீனப்படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இதையொட்டி சீனாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சீனப் பொருட்களைத் தடை செய்யக் கோரிக்கைகள் எழுந்தன. இந்திய அரசு நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி 59 சீன மொபைல் செயலிகளை தடை செய்தது. ஆயினும் சீனா தொடர்ந்து இந்தியாவை வேவு பார்ப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
எனவே இந்தியாவில் செயல்பட்டு வரும் சீன நிறுவனங்களுக்கும் சீன ராணுவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகம் கிளம்பி உள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவில் இயங்கி வரும் பல சீன நிறுவனங்களை இந்திய அரசு கண்காணித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவை சேர்ந்த ஹுவாவே, அலிபாபா, ஜிந்தியா ஸ்டீல், ஜின்ஜிங் கதே இண்டர்நேஷனல்,, சீனா எலெக்ரானிக் டெக் கார்ப்பொரேஷன், சைக் மோட்டார் ஆகிய நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.