டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை போலந்து உள்பட உக்ரைன் எல்லைப்பகுதியில் உள்ள நாடுகள் வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்துள்ள போர் இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். ஆனால், போர் காரணமாக, வான் எல்லை முடக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 16,000 இந்தியர்கள்: குடிமக்களை வெளியேற்ற அரசாங்கம் 5 கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது  அவர்களை மீட்கும் பணியில் மத்தியஅரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய பிரதமர் மோடி, போரை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வரும்படி கூறியதுடன், இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அதன் அண்டை நாடுகளான ஸ்லோவாக்கியா, ருமேனியா, ஹங்கேரி, போலந்து நாடுகளின் வழியாக மீட்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை, போலந்து,  ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளிடம் உதவி கோரியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.   இதில் வெற்றி கிடைத்துள்ளது. உக்ரைனில் இந்தியர்கள், தங்கள் நாடுகளின் வழியே இந்தியா திரும்ப அந்நாடுகள் தரப்பில் சம்மதம் தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து,  ருமேனியா வழியாக இந்தியர்களை மீட்கும் வகையில் , அங்குள்ள இந்தியர்களை சாலை மார்க்கமாக ருமேனியா எல்லைப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து விமானங்கள் மூலம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ருமேனியாவுக்கு  இரு விமானங்களை இந்தியா அனுப்ப உள்ளதாக தாகவும்,  முதற்கட்டமாக 500 இந்தியர்கள் மீட்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, உக்ரைனின் மற்றொரு அண்டை நாடான ஹங்கேரி மற்றும் போலந்து நாடுகள் வழியாகவும் இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என வெளியுறவுத்துறை  அறிவித்துள்ளது.