இந்தியாவே எனது நாடு; எனது அஸ்தியும் இங்குதான் கரைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உணர்ச்சிகரமாக முழங்கினார். .
சமீபத்தில் தமிழகம் மற்றும் கேரளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக சோனியாவை இத்தாலி நாட்டுக்காரர் என்று குறிப்பிட்டார்.
பிரதமரின் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசினார்.
தனது பேச்சின் இறுதியில் அவர், “இப்போது நான் பேசுவது அரசியல் அல்ல; என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி கூறிவரும் கருத்துக்கு பதில் அளிக்க விரும்புகிறேன்.
என்னை இத்தாலிக்காரர் என மோடி அடிக்கடி சொல்கிறார். ஆம், நான் பிறந்தது இத்தாலியில்தான். ஆனால், 1968-இல் என்றைக்கு இந்திரா காந்தியின் மருமகளாக இந்தியாவுக்கு வந்தேனோ அன்றிலிருந்து இன்று வரை இந்தியப் பெண்ணாகவே வாழ்ந்து வருகிறேன்.
ஏறத்தாழ 48 ஆண்டுகளாக இங்கு வாழும் எனக்கு நாடு மட்டும் அல்ல வீடும் கூட இந்தியாதான். இங்குதான் எனது அன்பார்ந்தவர்கள் இருக்கிறார்கள். இங்குதான் எனது கடைசி மூச்சு வரை வாழ்வேன். . எனது அஸ்தியும் உங்கள் மத்தியில்தான் கரையும்.
பிரதமர் நரேந்திர மோடி இத்தனை தரம் தாழ்ந்து பேசுவார் என நினைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் ஒருவரை விமர்சிப்பது பிரதமர் மோடிக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. எனது உணர்ச்சிகளை பிரதமர் மோடி புரிந்துகொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. மக்கள் எனது உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பார்கள் என நம்புகிறேன்” என்று உணர்ச்சிகரமாக பேசினார் சோனியா காந்தி.
https://www.youtube.com/watch?v=9omjvEaZ0Zo