டில்லி
கொரோனா வைரஸ் பாதிப்பால் சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா மிகப்பெரிய பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்
உலகைக் கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த இந்திய அரசு 21 நாட்கள் தேசிய ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் பலர் பணி இழந்துள்ளனர். சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் பிரபல பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜன் தனது வலைப்பதிவில், “கொரோனா பாதிப்பால் தற்போது இந்தியா கடும் பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளது, இது இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சந்திக்கும் மிகப் பெரிய பொருளாதார சரிவு ஆகும். இதற்கு முன்பு எப்போதும் இத்தகைய நிலை ஏற்பட்டதில்லை.
கடந்த 2008-09ஆம் வருடம் உலகப் பொருளாதார சரிவின் போது மக்களால் பணிகளுக்குச் செல்ல முடிந்தது. நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. நமது நிதி அமைப்பும் அரசுக் கருவூலமும் அப்போது வலுவாக இருந்தன. தற்போது நாம் கொரோனாவுக்கு எதிராகத் தீவிர போராட்டம் நடத்தி வருகிறோம். இப்போது நம்மிடம் மேலே கூறிய எதுவும் கிடையாது.
மத்திய அரசு அறிவித்துள்ள நேரடி பணப் பரிமாற்றம் பெரும்பாலான மக்களைச் சென்று அடைந்தாலும் எல்லோருக்கும் சென்று அடையாது. பலரும் இதை சொல்லி இருக்கிறார்கள். அரசு அளிக்கும் நேரடி பணப் பரிமாற்றத்தில் கொடுக்கப்படும் சொற்பத் தொகை ஒரு குடும்பத்துக்கு ஒரு மாத காலம் வாழ போதாது.
இதனால் இரண்டு பெரிய எதிர் வினைகள் உண்டாகும்.
முதல் எதிர்வினை தங்கள் சொந்த மாநிலங்களை விட்டு, வேறு மாநிலங்களுக்கு வந்து வேலை பார்க்கும் கடை நிலை ஊழியர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள், இந்த கொரோனா பாதிப்பால், மீண்டும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கே திரும்புவது ஆகும்
இரண்டாம் எதிர்வினை என்னவென்றால் மக்கள் பிழைப்புக்கு வழி இல்லை என்றால், அவர்கள் தேசிய ஊரடங்கை எல்லாம் பெரிதாகக் கண்டு கொள்ளமாட்டார்கள். தங்கள் பிழைப்பை உறுதி செய்ய தடையை மீறி வேலைக்குச் செல்லத் தொடங்கி விடுவார்கள்.
தேசிய ஊரடங்கு காலத்துக்குப் பின்பும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் எனத் திட்டமிட வேண்டும். அதன் பிறகு மேற்கொண்டு நாட்டை முழுமையாக மூடுவது மிகவும் கடினமான ஒன்று, ஆகவே, கொரோனா அதிகம் பரவாத இடங்களில், தேவையான முன் எச்சரிக்கைகளுடன், சில பொருளாதார நடவடிக்கைகளை எப்படித் தொடங்குவது என யோசிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.