கொரோனா வைரஸ் பரவல், ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் நாடே கடும் நெருக்கடியால் அவதியுறும்போது, மத்தியில் ஆளும் மோடி அரசோ, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைக்கும் மட்டரகமான வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பது தொடர்பாக, அக்கட்சியினர் பேசிய ஆடியே டேப்புகள் வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் அசிங்கமான அரசியல், மீண்டுமொருமுறை சந்தி சிரிக்கிறது.
ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்களை தூண்டிவிடுவதன் மூலம், பெரும்பான்மை பலம் கொண்ட ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது மோடி அரசு.
சச்சின் பைலட் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களுக்கு அனுப்பப்பட்ட தகுதிநீக்க நோட்டீஸை எதிர்த்து, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த பாரதீய ஜனதா மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் இடைத்தரகர் சஞ்சய் ஜெயின் ஆகியோர், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பன்வர்லால் ஷர்மாவிடம் பேசும் ஆடியோ டேப்புகள் வெளியாகி, அந்தக் கட்சியின் அரசியலை மீண்டும் ஒருமுறை அசிங்கப்படுத்தியுள்ளது.
மேலும், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கிற்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு திட்டமிட்டு வருவதாகவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில், கொரோனாவால் ஆயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்துள்ள நிலையில், ஏராளமானோர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், அந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பதில் கவலையில்லாது இருக்கும் நரேந்திர மோடி அரசின் குதிரை பேர அரசியல், மற்றொருமுறை வெட்டவெளிச்சமாகியுள்ளது.