புதுடெல்லி: உலகளவிலான பத்திரிகை சுதந்திர குறியீட்டு அட்டவணையில், இந்தியா 142வது இடத்தில் இருப்பதாக, ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ என்ற அமைப்பு கூறியுள்ளது.

கடந்தாண்டும், இதே இடத்திலிருந்த இந்தியா, இந்தாண்டும் அந்த மோசமான நிலையிலேயே தொடர்வதாக அந்த அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அட்டவணையில், நார்வே முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பின்லாந்து, டென்மார்க் ஆகியவை 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ளன. கிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்ரியா பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

நமது அண்டை நாடுகளான சீனா 177வது இடத்திலும், பாகிஸ்தான் 145வது இடத்திலும், நேபாள் 106வது இடத்திலும், இலங்கை 127வது இடத்திலும், வங்கதேசம் 152வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவானது, பத்திரிகை சுதந்திரத்தில் பிரேசில், மெக்சிகோ மற்றும் ரஷ்யாவுடன் மோசமான வகைப்பாட்டை பகிர்ந்து கொள்கிறது என அந்த அமைப்பின் அறிக்கையில் கூறியுள்ளனர்.

எந்த ஒரு பத்திரிகையாளரும், இந்தியாவில் விமர்சனங்களை வைத்தால், ஆளும் பாஜக ஆதரவாளர்களால் தேச விரோதிகள் மற்றும் அரசுக்கு எதிரானவர்கள் என மிரட்டப்படுவதாக அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதமர் மோடி ஊடகங்கள் மீதான தனது பிடியை இறுக்கி வருகிறார். 2020ம் ஆண்டில், 4 பத்திரிகையாளர்கள் தங்கள் பணிக்காக இந்தியாவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.