டில்லி
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கர்தார்பூர் குருத்வாரா கோபுரம் சிதைக்கப்பட்டதற்குப் பாகிஸ்தான் அரசிடம் இந்தியா விளக்கம் கேட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் நரோவல் மாவட்டத்தில் ரவி நதி அறுகில் கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது. இந்தியாவில் குர்தாஸ்ப்புரில் உள்ள தேரா பாபா நானக் புனிதத் தலத்தில் இருந்து இது நான்கு கிமீ தூரத்தில் உள்ளது. சீக்கிய மத நிறுவனர் குருநானக் தேவ் நினைவிடம் இங்கு அமைந்துள்ளது. இங்குச் செல்ல வசதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இணைந்து ஒரு பாதையை அமைத்துள்ளது
கர்தார்பூர் பகுதியையும் குர்தாஸ்பூர் பகுதியையும் இணைக்கும் இந்த பாதி கடந்த வருடம் நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. இது சீக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. அப்போது இந்த குருத்துவாராவில் பல புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு கோபுரம் சிதைந்து கீழே விழுந்துள்ளது. இது சீக்கிய மக்களுக்கு மிகவும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.
இது குறித்து இந்தியா பாகிஸ்தானுக்கு விடுத்துள்ள அறிக்கையில், “சீக்கியர்களின் புனித தலமான க்ர்தார்பூர் குருத்வாராவில் ஒரு கோபுரம் சிதைந்து விழுந்துள்ளது. இது எவ்வாறு நடந்தது மற்றும் இதற்குக் காரணம் என்ன என்பது குறித்த விளக்கத்தைப் பாகிஸ்தான் அரசு தெரிவிக்க வேண்டும்.
புதியதாக கட்டப்பட்டுள்ள இந்த கோபுரம் சிதைந்த நிகழ்வு சீக்கிய மக்களின் உணர்வை மிகவும் புண்படுத்தி உள்ளது. எனவே இந்த புதிய கோபுரம் சிதைந்தது குறித்த காரணங்களைப் பாகிஸ்தான் அரசு ஆய்வு செய்து கண்டறிய வேண்டும் அத்துடன் உடனடியாக இந்த கோபுரத்தைச் சரி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.